முத்துநகர் கடற்கரையில் தூய்மைப் பணிகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைப்பகுதியில் மீன்வளக் கல்லூரி சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

Update: 2024-06-06 13:43 GMT

தூய்மை பணி

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நீர்வளம் மற்றும் மண்வளத்தினை பாதுகாக்கும் பொருட்டு ஜீன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு; "நில மறு சீரமைப்பு, வறட்சியை மீட்டெடுத்தல் மற்றும் பாலைவன மீட்பு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது. 

  உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் பிரிவு, ரோட்டரி குழுமம், தூத்துக்குடி மாநகராட்சி, வி-கேன் அறக்கட்டளை இணைந்து "கடற்கரை சுத்தப்படுத்தும் பணி” தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரைப்பகுதியில், மேற்கொள்ளப்பட்டது.

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன், தனது தொடக்க உரையில் நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை கையாளும் முறையை எடுத்துரைத்தார்.  மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான  உறுதிமொழி அனைவராலும் மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பேராசிரியர்கள் மற்றும் 60 இளங்கலை மாணவர்கள்,  தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஹரி, வி-கேன் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்டோபர், ரோட்டரி குழும தலைவைர் முகமது இப்ராகிம் ஆகியோர் பங்கேற்று ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி, மீன் வலைகள், தெர்மாகோல், குடுவைகள் மற்றும் பிற குப்பைகளை முத்து நகர் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்டு முறையாக பிரித்து அதனை தூத்துக்குடி மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

  பேராசிரியர் மற்றும் தலைவர் வே. ராணி, உதவிப் பேராசிரியர்கள் மணிமேகலை, ஜீலியட் செல்வராணி, மற்றும் கருப்பசாமி, உதவிப்பேராசிரியர் நாட்டு நலப்பணித்திட்டம் பிரிவு அலுவலர் (பொறுப்பு)  ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர்.

Tags:    

Similar News