சேலத்தில் இயங்கி வந்த தபால் நிலையம் மூடல்
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையம் மூடப்பட்டது.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் விஜயராகவன் நகர் பகுதியில் காசகாரனுர் அஞ்சல் துணை நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சல் நிலையத்தில் விஜயராகவன் நகர் ஜாகிர் அம்மாபாளையம் காசக்காரனுர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கணக்கு தொடங்கி வரவு செலவு வைத்து வந்தனர். மேலும் தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய அனைத்து திட்டங்களிலும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
தங்க பத்திரம் திட்டம் நிரந்தர வைப்புத் தொகை அன்றாட சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சல் நிலைய பல்வேறு சேவைகளையும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அஞ்சல் நிலையத்தை திடீரென மூடுவதாக சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் துறையின் சார்பில் அஞ்சல் நிலையத்தின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அஞ்சல் துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறி விஜயராகவன் நகர் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் அஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் திடீரென அஞ்சல் நிலையத்தின் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது அஞ்சல் நிலையத்தில் அதிகளவில் சீனியர் சிட்டிசன் குடியிருந்து வருகின்றனர்.
குடியிருப்பு அருகிலேயே இருப்பதால் நாங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். எனவே அஞ்சல் நிலையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மீண்டும் இந்த அஞ்சல் நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்த விட்டால் தாங்கள் மேற்கு கோட்ட அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாகவும் தெரிவித்தனர்.