காங்கேயம் அருகே தேங்காய் லாரி தீபிடித்து சேதம்
காங்கேயத்தில் 16 டன் தேங்காய் பருப்பை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து கருகி சேதமாகியது
Update: 2024-05-23 07:34 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்தவர் தர்மலிங்கம் வயது 45. இவர் சொந்தமாக லாரி வைத்து லோடு ஏற்றி இறக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட சிவியர் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தேங்காய் பருப்பு களத்தில் இருந்து தர்மலிங்கம் தனது லாரியில் வாடகைக்கு மயிலாடுதுறை வரை கொண்டு செல்ல சுமார் 16 டன் எடையுள்ள தேங்காய் பருப்புகளை ஏற்றிக் கொண்டு பரஞ்சேர்வழி நால்ரோடு பகுதிக்கு எடைமேடைக்கு வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் மின்கம்பிகளில் லாரியின் மேற்பகுதி மோதியதால் பருப்புகளின் மீது மூடியிருந்த தார்ப்பாயில் தீப்பற்றி புகை வந்துள்ளது. இதனை கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் லாரி ஓட்டுனரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் லாரியை நிறுத்தி ஓட்டுநர் லாரியின் மேலே பார்த்த போது தீ மளமளவென வேகமாக பரவியது. உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைக்க முற்பட்டனர். மேலும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு லாரியிலிருந்த தேங்காய் பருப்புகள் கீழே அள்ளிவீசப்பட்டது. இதனால் சுமார் 13 லட்சம் மதிப்பிலான லாரியும் 15 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்புகளும் தீயில் கருகி நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏதுமின்றி தீ அணைக்கப்பட்டது.