பூந்தமல்லியில் இடிந்து விழுந்த பெருமாள் கோவில் குளம் மதில் சுவர்

பூந்தமல்லியில் இடிந்து விழுந்த பெருமாள் கோவில் குளம் மதில் சுவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-16 11:28 GMT

பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான கோவில் குளத்தின் மதில் சுவர் மற்றும் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 பூந்தமல்லியில், வைணவ மகான் ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான, வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், பெருமாள் நீராடிய ஒரு குளமும், ஆண்டாள் நீராடிய ஒரு குளமும் உள்ளன. இதில், ஆண்டாள் நீராடிய குளம், பராமரிப்பின்றி உள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை,

இந்த குளத்தில் கலந்து மாசடைந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் போது, சாலையோரம் உள்ள இந்த குளத்தின் மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் இந்த மதில் சுவர் சீரமைக்கப்படவில்லை. மேலும், குளத்தின் படிக்கட்டுகளும் பல இடங்களில் சேதமாகி உள்ளன. எனவே, குளத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில்,‘ஆண்டாள் நீராடிய இந்த குளம், தற்போது பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் உள்ளதை பார்க்கும் போது, வேதனையாக உள்ளது. இந்த குளம், இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

எனவே, இந்த குளத்தை சீரமைத்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீரை குளத்தில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதில் சுவர் மற்றும் படிக்கட்டுகளை சீரமைக்க பொறியாளர் குளத்தை நேரில் ஆய்வு செய்துள்ளார். திட்ட மதிப்பீடு தயாரித்து, குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags:    

Similar News