காரியாபட்டி ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், வலுக்கலொட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.21 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், வரலொட்டி ஊராட்சி, நாகம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு வருதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.88 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், அழகியநல்லூர் ஊராட்சி, கெப்பிலிங்கம்பட்டி கிராமத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும், நந்திகுண்டு ஊராட்சி, மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், நந்திகுண்டு கிராமத்தில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.24 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.