கல்லூரி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்!
கல்லூரி நிறுவனங்கள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்து பயன்பெறச் செய்ய வைக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 8,478 மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிறகல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கல்வியாண்டு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் பெற்றனர். கடந்த மார்ச் மாதம் அரசு வெளியிட்ட புதிய ஆணையில், வரும் கல்வியாண்டு முதல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை தமிழ்வழி கல்வியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது கல்லூரி நிர்வாகம் அந்த மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.