மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.42 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840- மதிப்பில் மொத்தம் ரூ.3.42 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.