தஞ்சையில் 'கல்லூரிக் கனவு' : உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
தஞ்சையில், 'நான் முதல்வன் திட்டம்' 'கல்லூரிக் கனவு' உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்திட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த மார்ச் 2024 இல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், 'கல்லூரிக் கனவு' உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மே.11 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மஹாலில் நடைபெற உள்ளது.
இந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன்வளத்துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதர பாடப் பிரிவுகள் குறித்து துறை வல்லுநர்கள் மூலம், உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய் துறை அலுவலர்களின் ஆலோசனைகள், வங்கி மேலாளர்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபர் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரிகளின் அரங்கங்கள் மற்றும் வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட உள்ளது. எனவே, நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் பங்குபெற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.