வேலூரில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி!
வேலூர் மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமான பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு எனும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வி பயில வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, எஸ்பி மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்கல்வி பயில்வதன் அவசியம் மற்றும் உயர்கல்வி பயில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் மேற்படிப்பை தேர்வு செய்வது பற்றியும், போட்டி தேர்வுகளுக்கு தயாராவது, கலை, அறிவியல் கல்லூரியில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது, கல்விக்காக வங்கிக்கடன் பெறுவது குறித்து துறை வல்லுனர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
பல்வேறு கல்லூரிகள் மற்றும் அரசு துறைகளின் சார்பில் உயர்கல்வி படிப்புகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக் கப்பட உள்ளன. கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு உயர்கல்வி தொடர்பாக வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று பயனடையலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.