கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை
ஒருதலையாக காதலித்து வந்த கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 05:52 GMT
கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் ஆசூரை சேர்ந்தவர் சந்திரபாபு. விவசாயி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 21). இவர் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த மாணவியிடம் தனது காதலை பலமுறை கார்த்திக் கூறியும், அவர் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கார்த்திக் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய கார்த்திக், வெங்கந்தூர் கிராமத்தில் உள்ள ரமேஷ் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியதச் சூர் போலீசார் கிணற்றில் இறந்து கிடந்த கார்த்திக் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்ததும், அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால், 'வாட்ஸ்-அப்'பில் வெயிட்டிங் பார் மை டெத் என்று ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.