தூர்வாரப்படாத சிட்கோ கால்வாய் - அமைச்சரிடம் தொழிற்துறையினர் புகார்
திருமுடிவாக்கம் 'சிட்கோ'வில் மழைநீர் வடிகால்வாய்கள் துார்வாரப்படவில்லை என தொழிற்சாலை உரிமையாளர்கள், அமைச்சர் அன்பரசனிடம் புகார் தெரிவித்தனர்.
குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மழை வெள்ளம் சூழ்ந்த தொழிற்சாலை பகுதிகளை சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, தொழிற்சாலை உரிமையாளர்கள், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்போட்டையில் உள்ள கால்வாய்களை பொதுப்பணித் துறையினர் துார்வாரவில்லை என அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுப்பணித் துறையினரிடம் விளக்கம் கேட்ட அமைச்சர் அன்பரசன், கால்வாய்களை துார்வார வேண்டும் என தெரிவித்தார். அப்போது, அருகில் இருந்த ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, 'குன்றத்துார் அருகே சிக்கராயபுரம், கொல்லச்சேரி ஊராட்சிகளில் பொதுப்பணித் துறையினர் கால்வாய்களை துார்வாராததால் அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது கால்வாயை துார் வாருங்கள். அந்த பகுதியினர் வருத்தத்தில் உள்ளனர்' என பொதுப்பணி துறையினரிடம் தெரிவித்தார்.