மோசடி கும்பல் குறித்து புகார்: குற்றப்பிரிவு எஸ்.பி

மோசடி கும்பல் குறித்து புகார் தெரிவிக்கலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.பி. ஜோஸ் தங்கையா தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-30 09:28 GMT

முகாமில் பேசும் குற்றப்பிரிவு எஸ்பி

முதலீடு செய்தால் அதிக பணம் தருகிறோம் என்று கூறும் மோசடி கும்பல் குறித்து போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா கூறினார்.

சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று ஏற்காட்டில் நடைபெற்றது. இதற்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, முதலீடு செய்யும் பணத்திற்கு 18 முதல் 20 சதவீதம் வரை வட்டியானது மாதந்தோறும் வங்கியில் செலுத்தப்படும். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு குலுக்கல் சீட்டு, மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற பெயரில் கட்டிய பணத்திற்கு அதிக வட்டி மற்றும் பரிசு பொருட்கள் தருகிறோம் என்று கூறும் மோசடி கும்பல் குறித்தும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

வீட்டு மனைத்திட்டம், நகைக்கடை தொடங்கி மாதம் பணம் செலுத்தினால், தங்கம் வழங்குகிறோம். பங்கு சந்தை, பிட்காயின், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இருமடங்கு பணம் தருகிறோம். மரம், மூலிகை செடி, கோழி, ஆடு வளர்ப்பு போன்ற திட்டங்களில் முதலீடு செய்தால் அதிகம் பணம் தருகிறோம் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

எனவே முதலீடு செய்தால் அதிகம் பணம் தருகிறோம் என்று கூறும் மோசடி கும்பல் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு அல்லது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றி பணம் மோசடி நடப்பதை தவிர்க்கவே இந்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த முகாமில் 300 மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பொருளாதார குற்றப்பரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்செல்வன், செந்தில் ராஜ்மோகன், சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News