சமாதானக் கூட்டத்தில் மோதல்: 3 போ் மீது வழக்கு
சங்கரன்கோவிலில் சமாதானக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதை அடுத்து 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-05-11 13:45 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலவயலி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் நிா்வாக உரிமை தொடா்பாக ஒரே சமூகத்தைச் சோ்ந்த இரு தரப்பினரிடையே நீண்ட நாள்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே 21ஆம் தேதி பொதுமக்களுடன் சோ்ந்து கோயில் திருவிழாவை நடத்த வேண்டும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினரிடையே மோதலை தவிா்ப்பதற்காக சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை இரவு வட்டாட்சியா் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம். இந்தத் தாக்குதலில் மேலவயலியைச் சோ்ந்த முருகன் மகன் அருணாசலம்(40) காயமடைந்தாா். உடனே அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில் மேலவயலியைச் சோ்ந்த வேல்சாமி மனைவி சுப்புத்தாய், மகள் தேன்மொழி, மற்றொரு வேல்சாமி மகன் செல்வகுமாா் ( 38 ) ஆகிய 3 போ் மீது சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.