கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் குழம்பி தவிக்கும் பயணிகள்

புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2024-01-02 04:55 GMT
 குழம்பி தவிக்கும் பயணிகள்

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது. பஸ் நிலையத்தின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்கள் உள்ளன.

மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் உள்ளதால் வெளியூர்களில் இருந்து அதிக உடைமைகளை கொண்டு வரும் பயணிகள் மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தினருடன் எங்கே செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது. பஸ் நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் பேட்டரி கார் வசதி உள்ள நிலையில் அவை அதிகாலை நேரத்தில் பயன்பாட்டில் இல்லை.

இதனால் பயணிகள் அவதி அடையும் நிலை உள்ளது. மேலும் சில பயணிகள் விரைவு பஸ்களில் ஏற்கனவே கோயம்பேடு வரை டிக்கெட் முன்பதிவு செய்து உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடப்படுவதால் அவர்கள் டிரைவர், கண்டக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலையில் 2-வது நாளாக சில பயணிகள் கண்டக்டரிடம் இதுபற்றி கேட்டு கேள்வி எழுப்பினர்.

இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பயணிகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி. சாலையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்களை அடையாளம் காண முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News