வாலாஜாபாத் சாலையில் தொடரும் நெரிசல்
சாலையின் இருபுறமும் கடைகளையொட்டி வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
Update: 2024-03-02 08:53 GMT
காஞ்சிபுரத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வாலாஜாபாத் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கும் ஏராளமான தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்துகள், வாலாஜாபாத் வழியாக செல்கின்றன. குறுகிய பஜார் வீதியில் தற்போது கனரக வாகனங்கள் இயக்கும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட இயலாத நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் கடைகளையொட்டி வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, வாலாஜாபாத் பகுதியினர் கூறியதாவது: வாலாஜாபாதில் குறுகலாக உள்ள பஜார் வீதியில், கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரத்தில் வாலாஜாபாத் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செங்கல்பட்டு - வாலாஜாபாத் சாலை விரிவாக்கம் மற்றும் வாலாஜாபாத் புறவழி சாலை திட்டப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை தொடர்ந்து, வாலாஜாபாத் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். காலை, மாலை, நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.