தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ், பாஜக எந்த நன்மையும் செய்ததில்லை - சீமான்

மத்தியில் தலா 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரசும், பாஜகவும் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்ததில்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தின் போது பேசினார்.

Update: 2024-04-15 02:24 GMT

சீமான் பிரசாரம் 

 தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீருக்கு ஆதரவாக  பிரசாரம் செய்த சீமான் பேசியது: இந்த நாட்டை காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அடுத்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. நம் தமிழ்நாட்டுக்கு ஒரேயொரு செய்த நன்மையைச் செய்ததாக இருவராலும் வாக்கு சேகரிக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தை இரு கட்சிகளும் கூறினால், நாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் போய்விடுகிறோம்.   அவர்கள் வளர்ச்சி, வளர்ச்சி எனக் கூறினாலும், வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவே இல்லை. அப்பட்டியலிருந்து இந்தியாவை நீக்கிவிட்டனர்.

நகர்ப்புற வளர்ச்சியை மட்டுமே கவனம் செலுத்துவர். இவர்கள் நகர்ப்புற வளர்ச்சியை மட்டுமே வளர்ச்சி, வளர்ச்சி எனக் கட்டமைப்பு செய்வர். நச்சுகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை அமைப்பர். தனியொரு முதலாளியின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி எனக் கூறுவர். நம் உழைப்பைச் சுரண்டி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தைக் கொண்டு செல்கிற முதலாளிதான் வாழ்வானே தவிர, ஊதியத்தை வாங்கும் தொழிலாளர்களால் வாழ முடியாது. சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், நாட்டின் பொருளாதாரத்தைச் சம விகிதத்தில் வளர்த்தெடுக்க முடியாது.

எனவே சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நச்சுத் தொழிற்சாலைகளை அனுமதிக்காமல், நிலமும், வளமும் சார்ந்த தொழில்களை வளர்க்க வேண்டும். காவிரியில் தண்ணீர் பெற முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கூறும் நிலையில், அவர்களுடன் தேர்தலில் கூட்டும், சீட்டும் இல்லை என ஸ்டாலின் கூறியிருக்க வேண்டும். ஆனால், அக்கட்சிக்கு 10 சீட்டு வழங்கினார். எனவே என் உயிருக்கு, உணர்வுக்கு, உரிமைக்கு நிற்காத உங்களுக்கு வாக்கு கிடையாது என நம் மக்கள் கூற வேண்டும் என்றார் சீமான்.

Tags:    

Similar News