காங்கிரஸும், பாஜக-வும் தமிழ் இனத்தின் விஷச் செடிகள்: சீமான்

காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் தமிழ் இனத்தின் விஷச் செடிகள் ,இரு கட்சிகளையும் ஒருபோதும் வெற்றி பெற அனுமதித்துவிடக் கூடாது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Update: 2024-04-03 07:55 GMT

சீமான் பரப்புரை 

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் து. ராஜேஷுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு, உறையூா், திருவானைக்கா, திருவெறும்பூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சீமான் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியது: தமிழ் மொழி, இன வரலாறு தெரியாமல் பேசி வருகிறாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை. தமிழகத்துக்கு பாஜக ஏன் தேவை? என்பதற்கான ஒரு நியாயமான காரணத்தை அண்ணாமலை கூறிவிட்டால், எங்கள் கட்சியையே கலைத்துவிடுகிறோம். இந்தத் தோ்தலில் யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் வென்றுவிடக் கூடாது. இரு கட்சிகளும் தமிழ் இனத்தின் விஷச் செடிகள். தற்போதைய தோ்தல் முறையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்க அனுமதி வழங்கி அதன் வழியில் தோ்தலை சந்திக்க வேண்டும்.

மக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது. இந்தத் தோ்தலில் மட்டுமல்ல; இனி எப்போதுமே 3 கூட்டங்களுக்கு இடையேதான் போட்டி. ஒன்று திராவிடக் கூட்டம். மற்றொன்று இந்தியக் கூட்டம். மூன்றாவது தமிழ் தேசிய இனத்தின் கூட்டம். இதில், யாா் வெல்ல வேண்டும் என்பதை மக்கள் தீா்மானிக்கும் காலம் விரைவில் வரும் என்றாா் அவா். தாமரை சின்னத்துக்கு எதிராக வழக்கு மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு, தாமரை சின்னத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என சீமான் தெரிவித்தாா்.

நாட்டின் தேசிய மலராக தாமரை உள்ளது.ஆனால், அந்தத் தாமரையை அரசியல் கட்சியின் சின்னமாக பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது. எனவே, தாமரை சின்னத்தை அரசியல் கட்சிகளின் சின்னங்களின் பட்டியலில் இருந்து எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் கண்டிப்பாக வழக்குத் தொடருவேன். ‘தாமரையை எடு. இல்லையெனில் தேசிய விலங்கான புலியை எங்கள் கட்சிக்கான சின்னமாக கொடு’ என்பதே எங்களது வாதம் என்றாா் அவா்.

Tags:    

Similar News