பாஜக நிர்வாகி மீது காங்கிரஸ் புகார்
கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பியை தரக்குறைவாக பேசிய பாஜக மாநில செய்திதொடர்பாளரை கைது செய்யக்கோரி ஒசூர் டிஎஸ்பி யிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில்வேநிலையத்தில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி அவர்கள் அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் காணொளி வாயிலாக பல்வேறு பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஒசூர் ரயில்வே நிலைய வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்த அரசு நிகழ்வில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் பங்கேற்றிருந்த நிலையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் உள்ளிட்ட பாஜகவினரும் மத்திய அரசு நிகழ்ச்சி என்பதால் பலர் பங்கேற்றிருந்தனர். பிரதமர் நிகழ்ச்சிக்கு பிறகு, இரயில்வே நிலையத்தில் கல்வெட்டு திறப்பு விழா நடந்தபோது ரயில்வே துறையினர் சிட்டிங் எம்பி செல்லகுமாரை மட்டும் அழைத்து கல்வெட்டு திறந்ததால் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மனை அழைக்காததால் ஆத்திரமடைந்த நரசிம்மன் ரயில்வே அதிகாரிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் நாய்கள், எம்பி பிராடு நெளிவுசுளிவு தெரியாதா என தரக்குறைவாக பேசியிருந்தார்.
இந்தநிலையில் ஓசூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பாஜக நிர்வாகி நரசிம்மனை கைது செய்யக்கோரி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முரளிதரன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.