சிவகங்கை நறுமண பூங்காவில் கலந்தாய்வு கூட்டம்
சிவகங்கை நறுமண பூங்காவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை நறுமணப் பூங்காவில் தொழில் துவங்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை நறுமண பூங்காவில் முதலீட்டாளர்கள் கலந்தாய்வு மற்றும் நறுமணப் பொருட்களுக்கான வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், இந்த நறுமண பூங்கா திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. யாருக்கு பொறுப்பு இருந்ததோ அவர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை.
இந்த நறுமண பூங்காவில் அனைத்து தொழில் கூடங்களிலும் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க வேண்டும். 10 ஆண்டுகளாக நறுமண பூங்காவை பாதுகாத்த பாதுகாப்பு பணியாளர்களுக்கும், பராமரிப்பு பணியாளர்களுக்கும் நன்றி. நான் எப்போது வந்தாலும் அவர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.
10 ஆண்டுகளாக மிக சிறப்பாக இந்த நறுமண பூங்காவை பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார்கள். தற்போது ஏழு மாவட்டங்களில் இருந்து தொழில் முதலீட்டாளர்களை அழைத்து இந்த சந்திப்பு கூட்டம் நடக்கிறது. தொழில் முதலீட்டாளர்கள் நறுமண பூங்காவை சுற்றி பாருங்கள்.
தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. நீங்கள் முதலீடு செய்து தொழில் துவங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்தும் முதலீட்டாளர்கள் இந்த நறுமண பூங்காவில் முதலீடு செய்து தொழில் துவங்கலாம். உங்களுக்கு தமிழக அரசு சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்தார்.
பின்னர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசுகையில், மழைக்காலங்களில் சேதமடையும் நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவது போல் முண்டு மிளகாய் பயிர் செய்பவர்களுக்கும் முறையான இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். நமது மாவட்டத்தில் நறுமண பொருட்கள் விளைய வைக்கக்கூடிய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த நறுமண பூங்காவில் தொழில் முதலீட்டாளர்கள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்தி இந்த பகுதியில் உள்ள மக்கள் இளைஞர்கள் பயனடையும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெராவித்தார்