பெரம்பலூரில் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூரில் அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வினை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஜூன் ஒன்பதாம் தேதி அன்று நடத்தப்படவுள்ள தொகுதி IV தேர்வினை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் 9ம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள குரூப்- 4.க்கான எழுத்துத்தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் 41 மையங்களிலும்,
ஆலத்தூர் வட்டத்தில் 4 மையங்களிலும், குன்னம் வட்டத்தில் 8 மையங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் 8 மையங்களிலும் என மொத்தம் 61 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பெரம்பலூர் வட்டத்தில் 12,597 நபர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 1077 நபர்களும், குன்னம் வட்டத்தில் 2234 நபர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 2261 நபர்களும், என மொத்தம் 18,169 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, போதுமான இருக்கைகள் போன்ற அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 30 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தேர்வு நடைபெறும் நாளன்று வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், வினாத்தாள்கள் பெறுவது தொடங்கி தேர்வு முடிவுற்ற பின்னர் விடைத்தாள்கள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பது வரை தேர்வின் அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் TNPSC அலுவலருக்கோ அல்லது தேர்வு அழைப்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18004190928 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு,
சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் மைதீன், உதவி பிரிவு அலுவலர் கேசவப்பெருமாள் அனைத்து வட்டாட்சியர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.