ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் வருகிற 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போராட்ட ஆயத்த மாநாடு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தன், திருவேரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் சுரேஷ், அர்த்தனாரி, முருகன், குபேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்றும், அதனை தொடர்ந்து 26-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்தும்,
அதில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை சேர்ந்தவர்களும் முழுமையாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் நிருபர்களிடம் கூறும் போது, ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்களது சங்க போராட்டங்களில் பங்கேற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நெருங்கும் வேளையில் இதுவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வரவேண்டும் என்றார்.