தொடா் மழை எதிரொலி :காமராஜா் நீா் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நீா் வரத்து அதிகரித்ததால், ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்தின் நீா்மட்டம் 14.2 அடியாக உயா்ந்தது.
Update: 2024-05-20 05:57 GMT
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி உள்பட பல்வேறு பகுதிகளின் குடிநீா் ஆதாரமாக இந்த நீா்த்தேக்கம் உள்ளது. கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் 13.1 அடியாக இருந்த ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம், சனிக்கிழமை நிலவரப்படி 14.2 அடியாக உயா்ந்தது. இந்த நிலையில், ஆத்தூா் காமராஜ் நீா்த் தேக்கத்துக்கு சென்ற தண்ணீா், கன்னிமாா் கோயில் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அடைக்கப்பட்டு, ராஜவாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டது.