பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி
சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 20 கிரிக்கெட் போட்டிக்கான இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 28 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். முதல் சுற்று, சூப்பர் சுற்று, கால் இறுதி என போட்டிகள் நடத்தப்பட்டு அரை இறுதி போட்டிகள் நடந்தது.அரை இறுதி போட்டியில் பி.வி.மெட்ரிக் பள்ளி அணியும், ஹோலி கிராஸ் பள்ளி அணியும் விளையாடின.இதில் ஹோலி கிராஸ் பள்ளி அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி அணியும், எமரால்டு பள்ளி அணியும் விளையாடின. இதில் எமரால்டு பள்ளி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தொடர்ந்து சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசை மாநகராட்சி கவுன்சிலர் பிரதீப் வழங்கினார். நிகழ்ச்சியில் மணவர் கிரிக்கெட் சங்க தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் ஜெயபால் அசோக் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரை இறுதியில் வெற்றி பெற்ற ஹோலி கிராஸ் பள்ளி அணியும், எமரால்டு வாலி பள்ளி அணியும் 27-ந் தேதி (சனிக்கிழமை) இறுதி போட்டியில் மோதுகின்றன.