பயிா் காப்பீடு: பொது சேவை மையங்களில் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு வசதிக்கு பதிவு செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-27 04:18 GMT
 பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு வசதிக்கு பதிவு செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்ய விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நிகழ் ஆண்டு கரீப் பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்யப்படும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ. 712, மக்காச்சோளத்துக்கு ரூ. 440, உளுந்துக்கு ரூ.308, நிலக்கடலைக்கு ரூ.480, சோளத்துக்கு ரூ.282, பருத்திக்கு ரூ.612 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீடு பதிவு செய்வதற்கான விதைப்பு பருவம் நெல் பயிருக்கு ஜூன், ஜூலை எனவும், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, சோளம் பயிா்களுக்கு மே, ஜூன் எனவும், பருத்திக்கு ஏப்ரல், மே எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி காப்பீடு செய்வதற்கு பருத்திக்கு ஜூலை 1, சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு ஜூலை 15, நெல், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிா்களுக்கு ஜூலை 31 கடைசிநாளாகும். நிகழாண்டுக்கான பயிா் காப்பீடு திட்டம் எஸ்பிஐ பொது காப்பீடு நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவம், பதிவு படிவம், அடங்கல், தடுக்கப்பட்ட விதைப்பு மற்றும் விதைப்புக்கு முன்பே பதிவு செய்ய மட்டும் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் விதைப்புச்சான்று, ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.

Tags:    

Similar News