வரத்து குறைவால் நுங்கு, வெள்ளரி விலை உயர்வு
சேலத்தில் வரத்து குறைவால் வெள்ளரி மற்றும் நுங்கு விலை உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த 23-ந் தேதி சேலம் மாவட்டத்தில் 108.2 டிகிரி வெயில் பதிவானது. தேவையில்லாமல் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டாலும் அன்றாட தேவைக்கு மக்கள் வெளியில் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியில் வந்து செல்கின்றனர்.
அவர்கள் வெயில் கொடுமையில் இருந்து பாதுகாத்து கொள்ள சாலையோர கடைகளில் தர்பூசணி, மோர் ஆகியவற்றை வாங்கி அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். மேலும் சாலையோரம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் நுங்கு, வெள்ளரி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு கோடை வெப்பத்தில் இருந்து காத்து கொள்கின்றனர். இதற்கிடையே கடந்த ஆண்டை விட இந்தாண்டு நுங்கு விலை உயர்ந்து விற்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் அலுவலகம், தொங்கும் பூங்கா உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரம் நுங்கு விற்பனை செய்பவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஒரு நுங்கு ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஒரு நுங்கு ரூ.5-க்கு விற்பனை செய்கிறோம். என்றனர். இதேபோல் வெள்ளரி விற்பனை செய்யும் பெண்கள் கூறுகையில், சேலம், நாமக்கல், தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கடந்து ஆண்டு விவசாயிகளிடம் ஓரு மூட்டை வெள்ளரி ரூ.1,000-க்கு வாங்கி வந்தோம். இந்தாண்டு விவசாயிகள் ஒரு மூட்டை வெள்ளரி ரூ.2 ஆயிரத்துக்கு தான் தருகின்றனர். விளைச்சல் குறைவால் அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.