மானாமதுரையில் ஆவின் பாலகம் பூட்டப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதி
மானாமதுரையில் ஆவின் பாலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலிருந்து மதுரை செல்லும் 4 வழிச்சாலையின் ஓரத்தில் ஆவின் விற்பனையகம் செயல்பட்டு வந்தது. இங்கு ஆவின் பால் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மேலும் இதனை ஒட்டி சிறுவர்கள் பூங்காவும் அமைக்கப்பட்டிருந்ததால் மதுரை, ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் செல்லும் ஏராளமான பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்தி தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிச் செல்வார்கள், இந்நிலையில் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மாலை நேரங்களில் தங்களது குழந்தைகளை பூங்காவிற்கு கூட்டிச்சென்று பொழுதை கழித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த ஆவின் விற்பனையகம் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பூட்டி கிடப்பதால் வாடிக்கையாளர்களும், நான்கு வழிச் சாலையில் செல்லும் பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், ஆவின் விற்பனையகம் மூடப்பட்டுள்ளதால்,
தற்போது கடும் கோடை வெயில் அடித்து வருகிற நிலையில் ஐஸ்கிரீம்கள் மற்றும் பால் பொருட்கள் வாங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகவே விரைவில் இதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்,
ஆவின் விற்பனையக ஊழியர் ஒருவர் கூறுகையில், விற்பனையகத்தில் தற்போது வேலையாட்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.