கலெக்டர் அலுவலகம் முன் டி.கொடியூர் மக்கள் தர்ணா
கலெக்டர் அலுவலகம் முன் டி.கொடியூர் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
டி.கொடியூர் கிராம மக்கள் 3 சென்ட் இடம் தரக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திருக்கோவிலுார் அடுத்த டி. கொடியூர் கிராம மக்கள் பட்டா வழங்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு 12 ஏக்கர் நிலம் அப்பகுதி மக்களுக்கு கொடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்டு கோப்புகள் தயார் செய்யப்பட்டது. இதற்கிடையே கோப்புகள் கிடப்பில் போடப்பட்டதால், கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 சென்ட் இடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், அதிகாரிகள் 3 சென்ட் நிலம் வழங்க முடியாது, 2 சென்ட் நிலம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் 1:00 மணியளவில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு, அலுவலக நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் ஷ்ரவன்குமார், டி.ஆர்.ஓ., சத்யநாராயணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.