இறந்த மோப்ப நாய் - துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம்

தஞ்சாவூரில் காவல் துறையில் இருந்த மோப்ப நாய் இறந்ததைத் தொடர்ந்து, காவல் துறையினரின் மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-01-08 08:40 GMT
தஞ்சாவூர் மாவட்ட காவலில் மோப்ப நாய் பிரிவில் 5 நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் காவல் துறையில் 11 ஆண்டுகளாக இருந்து வந்த சச்சின் என்கிற மோப்ப நாய் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தடயங்களைக் கண்டறிவதற்கு காவல் துறையினருக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது. மேலும், வெடிகுண்டு கண்டறிவதில் திறன் பெற்ற மோப்ப நாய் சச்சின் திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமர், முதல்வர் வருகையின்போது பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.  வயது மூப்பு காரணமாக இந்த நாய்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு அளிக்கப்பட்டு, தொடர்ந்து காவல் துறையின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இந்த நாய் சனிக்கிழமை இறந்தது. பணியில் இருக்கும் நாய் இறக்கும்போது, காவல் துறையினரின் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.  ஆனால், மோப்ப நாய் சச்சினின் சேவையைப் பாராட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விருப்பத்தின் பேரில், அதன் உடல் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தின் பின்புறம் 4 காவலர்கள் மொத்தம் 12 குண்டுகள் முழங்க காவல் துறையினரின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், இந்த நாயின் நினைவிடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News