பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம்: பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர்
பிறப்பு சான்றிதழ் தொடர்பாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி.
குழந்தை பிறந்த 21 நாட்களுக்கு பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் இறப்பு பதிவு சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழாகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை ஆதார் அட்டை பெற, பள்ளியில் சேர,
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் பெற, கடவுச்சீட்டு, விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்கு பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற வரும் டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கு பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல்) விண்ணப்பித்து பெயர் பதிவு செய்யலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு பிறகு பின்னர் வழங்க இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் www.tnurbanepay என்ற இணையதளத்தில் இலவசமாக பிறப்புச் சான்று பதிவிறக்கம் செய்யலாம் இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.