நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள்: ஸ்ரீபெரும்புதுாரில் வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுாரில், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நினைவிடம் சந்திப்பில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் மற்றும் திருவள்ளூர் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.
அதேபோல, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து செல்லும் வாகனங்கள் இந்த சந்திப்பு வழியாக, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியமான இந்த சந்திப்பில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
சாலையில் உள்ள மரண பள்ளங்களால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால், பீக் ஹவர் நேரங்களில் தேசிய நெஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்."