வெள்ளகோவில் அருகே கடன் தொல்லை: தேங்காய் கடைக்காரர் தற்கொலை
வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் தொழிலில் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையம் பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), இவரது மனைவி சத்யாதேவி (33). இவர்களுக்கு சவுமித்ரா (14) என்ற மகள் உள்ளார். செல்வராஜ் தனது சித்தப்பாக்கள் ராகவன், கதிர் வேல் ஆகியோருடன் சேர்ந்து மாந்தபுரம் நாட்ராய சுவாமி கோவிலில் பூஜை சாமான்கள்,
தேங்காய், பழக்கடை வைத்து நடத்தி வந்தார். அத்துடன் ஆட்டு வியாபாரமும், தேங்காய் பருப்பு வியாபாரமும் செய்து வந்தார். இவர் தொழில் தேவை மற்றும் குடும்பச் செலவுக்காக சிலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி உள்ளார். சிறிது காலம் வட்டி கட்டி வந்த பின்னர் ஒப்புக்கொண்ட காலத்தில் பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
இதனால் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அத்துடன் கடனை கேட்டு திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் நேற்று அதிகாலை தன்னுடைய பூஜை சாமான்கள் விற்கும் கடைக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரி சோதனை செய்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.