பூவிருந்தவல்லியில் கால்வாயினை சீரமைத்திட கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில், திறந்த நிலையில் காணப்படும் கால்வாயினை முறையாக அதனை சீரமைத்திட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட பிராடிஸ் சாலையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் என பல செயல்படுகின்றன. கடந்த 2018ல் அ.தி.மு.க., ஆட்சியில் இந்த சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால், பொதுமக்கள் இந்த வடிகால் வழியாக கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த கழிவு நீரானது, ஆவடி -சென்னீர்குப்பம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சரியாக வெளியேறாமல், ஆங்காங்கே தேங்கி, மீண்டும் குடியிருப்பில் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதை தடுக்கும் பொருட்டு, கடந்த ஆண்டு நவம்பரில், மின் மோட்டார் வாயிலாக கழிவுநீரை உறிஞ்சி, ஆவடி -- சென்னீர் குப்பம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் வெளியேற்றும் வகையில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'பம்ப் ஹவுஸ்' அமைக்கப்பட்டது. இந்நிலையில், பிராடிஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அரைகுறையாக விடப்பட்டு உள்ளது.
இதனால், பிராடிஸ் சாலை திரும்பும் வாகன ஓட்டிகள், திறந்தவெளி வடிகாலில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர், இந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்துள்ளனர். அதேபோல், வடிகால் அமைந்துள்ள பிராடிஸ் சாலையில், மண் குவியல் மற்றும் குப்பை அதிக அளவில் குவிந்துள்ளது. இதனால் சாலை சுருங்கி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பூவிருந்தவல்லி நகராட்சி அதிகாரிகள்,
பிராடிஸ் சாலை வளைவில் திறந்தவெளியில் காட்சியளிக்கும் வடிகாலை கான்கிரீட்டால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் உள்ள மண் குவியல் மற்றும் குப்பையை அகற்றி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.