பட்டுக்கோட்டை வட்டத்தை மூன்றாக பிரிக்க கோரிக்கை

720 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-01-14 03:19 GMT
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம்

தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 98 ஆவது மாதாந்திர கூட்டம் சனிக்கிழமை  பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வட்டக்கிளை தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.ஆனந்தராவ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை த.வேதையன் முன்மொழிந்து பேசினார் செயலாளர் இரா. அண்ணாதுரை மாதந்திர வேலை அறிக்கையையும், பொருளாளர் சோம.ஆறுமுகம் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனர்.  ஊடகவியலாளர் ப.தட்சிணாமூர்த்தி கருத்துரை ஆற்றினார்.

   வட்ட துணைத்தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.  அவர் பேசும்போது,  "தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், 720 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 3,96,736 மக்கள் தொகையைக் கொண்டது. இந்த வட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் இருக்கின்றன. மதுக்கூர் பேரூராட்சி இருக்கிறது பட்டுக்கோட்டை வட்டத்தில் மொத்தம் 165 கிராமங்கள் உள்ளன.102 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி புரிகிறார்கள்

. இந்த வட்டத்தில் குறிச்சி, திருச்சிற்றம்பலம், அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, நம்பிவயல், பெரியகோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூர், ஆண்டிக்காடு, பட்டுக்கோட்டை போன்ற பத்து உள் வட்டங்கள் (பிர்க்கா) உள்ளது.  பட்டுக்கோட்டை வட்டத்தின் மேற்கு எல்லையில் செருவாவிடுதி, நம்பிவயல், வடக்கில் கன்னியாகுறிச்சி,  ஆவிக்கோட்டை கிழக்கில் சுந்தரம், தெற்கில் இரண்டாம் புலிக்காடு, ஒட்டங்காடு போன்ற ஊர்கள் உள்ளன. 

பட்டுக்கோட்டை வட்டத்தில் கடலோர கிராமங்கள் இருப்பதால் இப்பகுதிகள் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. 720 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள பட்டுக்கோட்டை வட்டத்தை ஒரு வட்டாட்சியர் நிர்வாகம் செய்வது சிரமமாக இருந்து வருகிறது. அதிக வேலைப்பளுவும் வட்டாட்சியருக்கு இருக்கிறது. எனவே அரசின் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக சென்று அடையவும், மக்களின் குறைகளை விரைவில் தீர்க்கவும், மக்கள் தொலை தூரங்களில் இருந்து பயணம் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும் பட்டுக்கோட்டை வட்டத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அதிகாரிகளை நியமிக்க வேண்டும்" என்று கூறினார் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.தமிழ்மணி சிறப்புரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News