காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தக் கோரிக்கை
தஞ்சையில் விவசாயிகள் முதல்வரை சந்தித்து காவிரி குண்டாறு இணைப்பு சட்டத்தை வரைபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் தஞ்சையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கினார். சனிக்கிழமை காலையில் வழக்கமான நடைப்பயிற்சி முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமையில் 16 விவசாய சங்க நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து ஐஎன்டிஐ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பிஎஸ்சி வேளாண் இளங்கலை பட்டப்படிப்புக்கு விவசாயிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிளை துரிதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் முதல்வரிடம் முன் வைத்தனர்.
அதற்கு தேர்தல் முடிந்ததும் விவசாயிகளை அழைத்து பேசி பிஎஸ்சி வேளாண் படிப்புக்கு விவசாயிகளின்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி நிறைவடைந்த பின்னர் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.