மாரியம்மன் கோவிலில் சிலைகள் இடித்து அகற்றம்
மாரியம்மன் கோவிலில் சாமி சிலைகளை இடித்து அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் புகார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-13 06:29 GMT
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளருமான சரசுராம் ரவி தலைமையில் சேலம் சூரமங்கலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சி 19-வது வார்டு ஜாகீர் சின்ன அம்மாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளால் நேற்று திடீரென இடித்து அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு வழிபாட்டு தலத்தை இடிக்க வேண்டுமானால் முன்கூட்டியே மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் சாமி சிலைகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு தற்போது அங்கு முள்வேலி அமைப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். 60 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் வழிபட்டு வரும் அந்த கோவிலை சுற்றி முள்வேலி போடக்கூடாது. மேலும், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கோவிலில் சாமி சிலைகளை இடித்து அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.