கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியை டிராக்டர்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
டிராக்டரில் மணல் அள்ள அனுமதி கோரி புத்தூர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் வட்டம் கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பிறகு அங்குள்ள மணல் குவாரியில் இருந்து லாரிகளில் மட்டும் மணல் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது. இந்நிலையில் கபிஸ்தலம், புத்தூர், பட்டுக்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு சொந்தமான டிராக்டரில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இளங்கார்குடியைச் சேர்ந்த இன்ப ராஜ் தலைமையில் நேற்று காலை 60-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை புத்தூர் மணல் குவாரி முன்பு நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையறிந்த பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் போலீஸார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தினந்தோறும் 15 டிராக்டர்களுக்கு மட்டும் மணல் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.