கிராமத்திற்குள் நகரப் பேருந்து சென்று வரக் கோரி ஆர்ப்பாட்டம்
பேராவூரணியில் பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி, கோரிக்கை ஆர்ப்பாட்டம் கிளைச் செயலாளர் எம்.கே.ராமு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் துரை.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.ராஜமாணிக்கம் நிறைவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கே.அருணகிரி, நகரச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் நகரச் செயலாளர் சித்திரவேல், வீரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 'செங்கமங்கலம் ஊராட்சிக்குள் இரவு 9 மணிக்கு நகரப் பேருந்து எண்-2 ஏற்கனவே இயங்கி வந்த நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், பெண்கள் வசதிக்காக செங்கமங்கலம் ஊராட்சிக்குள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி - ஆவணம் சாலையில் செங்கமங்கலம் பேருந்து நிறுத்தம் இருபுறமும், செங்கமங்கலம் கீழத்தெரு இணைப்பு சாலை ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். மூவேந்தர் பள்ளி அருகே சி.எம்.பி ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டு வரும் பாலத்தை உடனடியாக முடித்து, பொதுமக்கள், வாகனங்கள் பாதுகாப்பு பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.