மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கரூரில் உண்ணா விரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர்.
கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை 110 கேவி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட மின் பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்ட, மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீட்டை வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில், அவரது தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது இழப்பீட்டுத் தொகையை உடனே விரைந்து வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் -ஐ அவரது அலுவலகத்தில் சன் நேரில் சந்தித்து மனு கொடுத்து பிரச்சினையை சுமூகமாக முடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். மாவட்ட வருவாய் அலுவலரும் கோரிக்கையை ஏற்று விரைவில் பிரச்சனை முடித்து வைப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்.