ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1000 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
தென்காசியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1000 கிலோ மாம்பழங்கள் அழிக்கப்பட்டது.
Update: 2024-05-02 00:43 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம், வல்லம், பிரானூர், செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழ சீசன் துவங்கியுள்ளது. கடந்த காலங்களில் மாங்காய்களை பறித்து இயற்கையான முறையில் வைக்கோல் போரில் சில நாட்கள் வைத்து அது பழுத்த பிறகு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். இது உடல்நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. ஆனால் இப்போது மாங்காய்களை ரசாயன ஸ்பிரே அடித்து உடனடியாக பழுக்க வைக்கும் முறைகளை கையாண்டு வருகிறார்கள். இது பொது மக்களின் உடல்நலத் திறக்கு பெரும் கேடு விளை விக்கும் என்று சுகாதாரத் துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம், வல்லம், பிரானூர் செங்கோட்டை, பகுதிகளில் ரசாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வருவதாக தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சசிதீபா ஆலோசனையின் படி தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் நேற்று குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள சில மாம்பழக்குடோன்களில் சோதனை மேற்கொண்டார். அப்போது ஒரு குடோனில் 800 கிலோ மாம்பழங்களும் மற்றொரு குடோனில் 200 கிலோ மாம்பழங்களும் இருந்தது. அந்த மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். அவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.