பவானியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி

பவானியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-06-15 07:05 GMT

பவானி அம்மன் கோவில் 

ஆடி மாத திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வரும் நிலையில், பவானியம்மன் கோவிலுக்கு வரும்  பக்தர்களுக்கு தங்கும் வசதி  மற்றும் தேங்கும் தண்ணீர், குப்பை ஆகியவற்றால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியபாளையம்,  பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா தற்போது நடந்து வருகிறது.

தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு சனி,  ஞாயிறு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு பல லட்சம் ரூபாய், எல்லாபுரம் ஒன்றியக் குழு பொது நிதியில் இருந்து செலவு செய்யப்படுகிறது.

ஆனால், ஆங்காங்கே குப்பை, சாலையில் தேங்கும்  தண்ணீர் ஆகியவற்றில் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் தொழிற்சாலையாக பெரியபாளையம் உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம், அதிகளவு பக்தர்கள் குவியும் பெரியபாளையத்தை கண்டுகொள்ளாதது, அவர்களுக்குத் தான் வெளிச்சம். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான அளவு இடவசதி இல்லை. ஆரணி ஆற்றில் போடப்பட்டுள்ள தற்காலிக குடில்களில் தங்க வேண்டி உள்ளது. இயற்கை உபாதைகளை கழிக்கவும், குளிக்கவும் இடமின்றி அவதிப்படுகின்றனர்.

இனி வரும் காலங்களில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News