மழை வேண்டி பூக்குழி இறங்கிய பக்தர்கள்
சிவகங்கை அருகே மழை வேண்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்
Update: 2024-03-16 04:11 GMT
சிவகங்கை அருகே நாலுகோட்டையில் அருள் பாலித்து வரும் புத்தடி கருப்பையா சுவாமி கோயிலில், மழை வேண்டி ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் முன்னர் அமைந்துள்ள திடலில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட ரூ 7.40 லட்சம் மதிப்பிலான நாடக மேடையை கிராம மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கிராமத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், சான்றிதழ்களும், கேடயமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் புத்தடி கருப்புசாமி கோயில் முன்புறம் காப்புக் கட்டி நேர்த்திக்கடன் இருந்த சாமியடிகளும், பக்தர்களும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் சாமியாடி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறியும், ஆசி வழங்கியும், திருநீறு பூசினார். இந்த விழாவில், நாலுகோட்டை, சோழபுரம், சிவகங்கை, ஒக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.