புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
2024ம் புதிய ஆண்டு இன்றைய தினம் பிறந்ததை முன்னிட்டு தேவாலயங்கள், கோவில்களில் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதிகாலை முதல் கோவில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் சாலை குமாரசுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதலிலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தை மாத பிறப்பு மற்றும் தைப்பூச திருநாளுக்காக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிகழ்ச்சிக்காக வருடப்பிறப்பான இன்றைய தினம் முதல் நெல்லை பகுதி மக்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர் அதன்படி நெல்லை சந்திப்பு சாலை குமாரசுவாமி திருக்கோவிலில் முருக பக்தர்கள் நூற்றுக்கணக்கான மாலை அணிந்து தங்களது பாதயாத்திரைக்கான விரோதத்தையும் தொடங்கியுள்ளனர். இதேபோல் புத்தாண்டு தினமான இன்று நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற திருக்கோவிலிலும் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.