வர்ணீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

Update: 2023-11-14 02:59 GMT
வர்ணீஸ்வரர் கோவில் குளம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையம் அருகில், பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, வர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் புனித நீராட குளம் உள்ளது. இந்த குளம் போதிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருந்ததுடன், ராஜவாய்க்காலில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் குளத்தில் கலந்து , பச்சை நிறத்தில் இருந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்தது. இந்நிலையில் குளத்தை துார் வாரி, படிக்கட்டுகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் சீரமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனாலும், குளம் முறையாக சீரமைக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ள பக்தர்கள், பெயரளவிற்கு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால், ஏற்கனவே இருந்தது போல் தற்போதும், குளத்தில் பச்சை நிறத்தில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. மேலும், சுற்று சுவருக்கு சிமென்ட் பூச்சு கூட செய்யவில்லை. எனவே, குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன், முறையாக சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News