கேஸ் ஆட்டோவுக்கு பர்மிட் வழங்க கோரி தர்ணா
சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் கேஸ் ஆட்டோவுக்கு பர்மிட் வழங்க கோரி ஆட்டோ டிரைவர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா செய்தார்.
Update: 2024-02-05 16:16 GMT
சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ யுவராஜ் (35) என்பவர் இன்று பதாகையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென கலெக்டர் கார் முன்பு அமர முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். அதில் நான் ஆட்டோ டிரைவர் எனக்கு உடல் நிலை பாதித்துள்ளது. சமீபத்தில் கேஸ் ஆட்டோ ஒன்று வாங்கினேன் இதற்கான பர்மிட் வழங்க கோரி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரைக்கும் அவர்கள் எனக்கு பர்மிட் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல், அவதூறாக பேசினர். இதைவிட்டால் எனக்கு வேறு தொழில் இல்லை. இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து. எனது ஆட்டோவுக்கு பர்மிட் வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து டவுன் போலீசார் அவரை அழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.