ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே தர்ணா போராட்டம்

கோவில் கொடிமரம் முன்பாக, பல ஆண்டு காலமாக இருந்த அனுமன் சிலையை கோவில் நிர்வாகம் நகர்த்தியதை கண்டித்து கோவில் உள்ளே போராட்டம் நடைபெற்றது.;

Update: 2024-03-11 12:56 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோவில் கொடிமரம் முன்பாக, பல ஆண்டு காலமாக இருந்த அனுமன் சிலையை கோவில் நிர்வாகம் நகர்த்தியதை கண்டித்தும், மீண்டும் அச்சிலையை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இவர்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களிடம், அனுமன் சிலையை சுற்றி வந்து வழிபடுவதற்கு ஏதுவாக அச்சிலை நகர்த்தி நிறுவப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், காவல் துணை ஆணையர் அன்பு ஆகியோர் போராட்டக்காரர்களிடம் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக புகார் அளியுங்கள். அதனை, மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News