அம்பத்தூர் அருகே திறப்பு விழா காணாமல் பாழடைந்த போலீஸ் குடியிருப்பு
அம்பத்தூர் அருகே திறப்பு விழா காணாமல் போலீஸ் குடியிருப்பு பாலடைந்துள்ளது.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், அம்பத்துார் அடுத்த அனுக்கிரஹம் நகரில் புழல் ஏரியையொட்டி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், புது போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த நான்கு கட்டடங்களில், ஒவ்வொன்றிலும், 10 குடும்பங்கள் வசிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு இன்னல்கள் காரணமாக மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், திறப்பு விழா காணாமலே, புது கட்டடம் பாழடைய துவங்கியது. நாளடைவில் 'குடி'மகன்களின் மதுக்கூடமாக மாறியது.
இதையடுத்து, போலீசார் அல்லது பகுதிமக்கள் பயன்படுத்தும் வகையில், கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. இது குறித்து நம் நாளிதழில், ஏப்., 9ம் தேதி செய்தி வெளியானது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுட்டதால், ஆவடி மாநகர போலீசார் ஆய்வுப்பணியை மேற்கொள்ள முடியவில்லை.
தேர்தல் முடிந்து, அதற்கான நன்னடத்தை விதியும் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அன்றைய தினம் மாலை, ஆவடி போலீஸ் கமிஷனரக கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன், தமிழ்நாடு வீட்டு வசதி நலவாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதன் பின், கட்டடங்களுக்கு அருகே ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் அகற்றி, கட்டட சீரமைப்பு, தடுப்புச் சுவர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கான,
செலவு மதிப்பீடு அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தயாரிக்க, தமிழ்நாடு வீட்டு வசதி நலவாரிய பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கட்டடம் புதுப்பொலிவு பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.