கோவில் விழாவில் தகராறு - தேடப்பட்ட 3 பேர் கைது

வானூர் அருகே கோவில் விழாவின் போது ஏற்பட்ட தகராறுக்கு பழிவாங்கும் விதமாக வீட்டின் மீது நாட்டு பட்டாசுகளை கொளுத்தி வீசி தலைமறைவான 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-30 02:02 GMT

கைதானவர்கள் 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நெமிலி கிராமத்தில் மன்னார்சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி வாழ்முனி சாமிக்கு சாற்றப்பட்ட வடை மாலையை சிலர், கிராம மக்கள் மீது வீசினர். அப்போது அதே ஊரைச்சேர்ந்த சிறுவன் ஒருவன் வீசிய வடை அதே கிராமத்தை சேர்ந்த தனுசு (வயது 37) என்பவர் மீது விழுந்தது. இதனை தனுசு தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவன் தனது அண்ணன் ஆகாஷிடம் (20) கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ், தனது நண்பர்சத்தியராஜ் (20) என்பவருடன் சேர்ந்து நாட்டு பட்டாசுகளை கொளுத்தி தனுசுவின் வீட்டின் மீது வீசியுள்ளார், இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதுகுறித்து வானூர் போலீசில் தனுசு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்திய ராஜ், ஆகாஷ் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஜெனிஷ்கான் (19) ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்களை பிடிக்க வானூர் இன்ஸ்பெக்டர் சிவ ராமன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்தநிலையில் 3 பேரும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சென்ற தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News