ஜல்லிக்கட்டு மைதானத்தில் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி வட்டத்துக்கு உட்பட்ட சோகத்தூர் ஊராட்சி ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Update: 2024-03-01 07:10 GMT
தருமபுரி மாவட்டம், சோகத்தூர் ஊராட்சி, ஏ.ரெட்டி அள்ளி கிராமத்தில் நடைபெற உள்ள ஐல்லிக்கட்டு நிகழ்ச்சியினை தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்திடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் வருவாய்த் துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை,தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள். 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும். உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றளிக்கவும். பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், காளைகள் போட்டியின் போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்போது வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. இ.ஆ.ப. அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசப்பாதம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரெ.சாமிநாதன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயசெல்வம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் கலந்துகொண்டனர்.