அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு, கழுதைக்கு மாற்றாக முதன் முறையாக டிராக்டர்கள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும் ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-18 06:19 GMT
ஆலோசனை கூட்டம்

தருமபுரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தி, ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மனு தாக்கல் மற்றும் பிரச்சாரங்கள் செய்யும்போது, கடைப்பிடிக்க வேண்டும் நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தி,தருமபுரி நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளில், ஐந்து தருமபுரி மாவட்டமும், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், 15,12,732 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில் 18-19 வயதுள்ள முதன் முறை வாக்காளர்கள் 32,535 பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும் 114 வாக்காளர்கள் நூறு வயதிற்கு மேற்பட்டவர்களும் வாக்களிக்க உள்ளனர். நாடாளுமன்ற தொகுதி முழுவதும் 1805 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 292 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 292 வாக்குச் சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வீரர்களும், நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் இணையவழி கேமராக்களில் பதிவு செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் முழுவதும் 45 வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினரும், 45 நிலையான கண்காணிப்பு குழுவினர், 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியிட்டவுடன் இந்த பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் குழுக்களாக பிரிந்து, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், கொடிகள், விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அழிக்கவும், அப்புறப்படுத்த அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் இருப்பதால், அதன் பிறகு ஊழியர்களைக் கொண்டு அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல் தேர்தல் பிரச்சாரங்களில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட வரை ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் 11, 660 அரசு அலுவலர்கள் மற்றும் 1300 காவல் துறையினர் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் பொருள், பணப் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை சிவிஜில் என்ற ஆப் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கோட்டூர், ஏரிமலை, அலக்கட்டு மலை போன்ற மலை கிராமங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த காலங்களில் கழுதைகள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக கழுதைக்கு மாற்றாக, டிராக்டர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News