வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-02-21 08:55 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சிவகாசி மாநகராட்சி ஸ்டாண்டர்டு காலனியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.38 இலட்சம் மதிப்பில் குழந்தைகள் பூங்கா மற்றும் விளையாட்டுக்களம் அமைக்கப்பட்டு வருவதையும், ஸ்டாண்டர்டு காலனியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும், திருத்தங்கலில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை, கழிப்பறை மற்றும் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், சாத்தூர் சாலையில் அருகில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மாநகராட்சி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதையும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.61 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News